இந்தியா

ஜோத்பூர் சின்க்காரா மான்வேட்டை வழக்கு: பாதுகாப்பு கேட்கிறார் சல்மான் கான் ஓட்டுநர்

ஆர்.ஷபிமுன்னா

ராஜஸ்தான் நீதிமன்றத்தால் பாலிவுட் நடிகர் சல்மான் கான், சின்காரா மான்வேட்டை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் முக்கிய சாட்சியான அவரது வாகன ஓட்டுநர், தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறி போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளார்.

கடந்த 1998-ல் ராஜஸ்தானின் ஜோத்பூரில் படப்பிடிப்பிற்கு சென்றிருந்த சல்மான் கான், சின்காரா வகை மான்களை வேட்டையாடியதாக அவர் மீது வழக்கு பதிவானது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் அவரை விடுதலை செய்து கடந்த திங்கள்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில், முக்கிய சாட்சியாக இருந்தவர் மான்வேட்டை சமயத்தில் சல்மானின் ஓட்டுநராக இருந்த ஹரீஷ் துலாணி. இடையில் பல வருடங்கள் தலைமறைவாகி இருந்தவர், வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்தார்.

இவர், இவ்வழக்கின் தீர்ப்பிற்கு பின்பும் சல்மான் மான்களை துப்பாக்கியால் சுட்டதை தான் பார்த்ததாக என்டிடிவி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார். இதன் பிறகு அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் தமக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனவும் கேட்டு ராஜஸ்தான் மாநில அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதில், சல்மானின் வழக்கில் சாட்சியமானதில் இருந்து தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும், தான் பரம ஏழை என்பதால் தன்னால் ஒரே இடத்தில் தங்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்பின் அடையாளம் தெரியாத சிலர் தன் குடும்பத்தாரை வந்து

மிரட்டிச் சென்றிருப்பதாகவும் ஹரீஷ் புகார் கூறியவர், தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கோரியுள்ளார்.

சல்மான்கான் வழக்கில் அவரது வழக்கறிஞர், முக்கிய சாட்சியமான ஹரிஷ் துலாணி திடீர் என காணமல் போய் விட்டதாக நீதிமன்றத்தில் கூறி இருந்தார். சுமார் 18 வருடம் நடைபெற்ற வழக்கில் ஹரீஷ் ஒருமுறை கூட சல்மான் வழக்கறிஞரால் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. இதை சேனலின் செய்தியாளரிடம் குறிப்பிட்ட ஹரிஷ், தான் காணாமல் போகவில்லை எனவும், மிரட்டல் காரணமாக தான் தலைமறைவாக வாழ்வதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், 18 வருடங்களுக்கு முன் தான் இந்த வழக்கில், ‘சல்மான் மான்களை சுட்டதை எனது கண்களால் பார்த்தேன்’ எனக் கூறியதில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதம் கிடைத்திருப்பதை உறுதி செய்த ராஜஸ்தான் உள்துறை அமைச்சரான குலாப்சந்த் கட்டாரியா, ஹரிஷ் துலாணியின் ஜோத்பூர் வீட்டில் சென்று விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார்

SCROLL FOR NEXT