இந்தியா

டெல்லி அதிகாரி கொலையில் தொடர்புபடுத்துவதா? - முதல்வர் கேஜ்ரிவால் வீட்டுக்கு முன்பு பாஜக எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரதம்

பிடிஐ

டெல்லி மாநகர கவுன்சில் (என்டிஎம்சி) உயர் அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில் தன்னை தொடர்புபடுத்திய முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலைக் கண்டித்து, அவரது வீடு முன்பு பாஜக எம்.பி. (கிழக்கு டெல்லி) மகேஷ் கிரி 2-வது நாளாக நேற்று உண்ணா விரதம் மேற்கொண்டார்.

என்டிஎம்சியின் எஸ்டேட் அதிகாரியான கான், ஜாமியா நகர் பகுதியில் கடந்த மே 16-ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குத்தகை அடிப்படையில் இயங்கி வரும் ஒரு ஓட்டலின் குத்தகை விதி முறைகள் தொடர்பான உத்தரவை பிறப்பிக்க இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது.

இந்தக் கொலையில் பாஜக எம்பி மகேஷ் கிரிக்கு தொடர்பு இருப்பதாக கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி கேஜ்ரிவாலுக்கு கிரி எழுதி யிருந்த கடிதத்தில், “என் மீதான குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்க 19-ம் தேதி மாலை 4 மணிக்கு ஆதாரத்துடன் ஒரு கிளப்புக்கு வர வேண்டும்” என அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த சவாலை ஏற்க கேஜ்ரி வால் மறுத்துவிட்டதால், அவரது வீட்டுக்கு வெளியே மகேஷ் கிரி நேற்று முன்தினம் உண்ணா விரதப் போராட்டத்தை தொடங்கினார்.

2-வது நாளாக நேற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்த மகேஷ் கிரி கூறும் போது, “என் மீதான குற்றச்சாட்டை கேஜ்ரிவால் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும்” என்றார்.

இதுகுறித்து கேஜ்ரிவால் ட்விட்டரில், “எம்.எம்.கான் கொலை வழக்கில் மகேஷ் கிரியை கைது செய்து விசாரிக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடியின் கைப்பாவையாக செயல்படும் போலீஸார் கிரியைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

எம்எம் கான் மகள் இக்ரா கூறும்போது, “என் தந்தை கொல்லப்பட்ட விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். இதற்கு நீதி கிடைக்க வேண்டும். உண்ணாவிரதப் போராட்டத்தை மகேஷ் கிரி கைவிட வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT