ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு வழக்கமான வர்த்தக நடைமுறைகளுக்குட்பட்டே அனுமதியைத் தான் அளித்ததாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
“அயல்நாட்டு முதலீட்டின் முகப்பு மதிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டே அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியம் நிதியமைச்சருக்கு அனுமதிக்காக சமர்ப்பித்தது.
எனவே ஒரு நிதியமைச்சராக வழக்கமான வர்த்தக நடைமுறைகளுக்குட்பட்டே நான் ஏர்செல் மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தேன்” என்றார் ப.சிதம்பரம்.
உச்ச நீதிமன்றம் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த விசாரணை பற்றிய நிலை அறிக்கையை சிபிஐ-யிடம் உச்ச நீதிமன்றம் கோரியுள்ளதையடுத்து ப.சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.
திங்களன்று உச்ச நீதிமன்ற அமர்வின் முன்பு சுப்பிரமணியன் சுவாமி கூறிய போது, சிபிஐ இந்த விவகாரத்தை அனைத்துக் கோணங்களிலிருந்தும் விசாரிப்பதாக தனக்கு பதில் அளித்தது என்றும் அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியம் அனுமதி உட்பட விசாரித்து சிபிஐ விசாரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுவாமி கோரினார்.
சுவாமி தனது மனுவில், 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம்தான் நிதியமைச்சர் என்ற அதிகாரத்தில் அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரிய அனுமதியை அளித்தார் என்று கோரியிருந்தார். ஆனால் இந்த அனுமதிக்கு முன்பாக பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவிடம் ஆலோசனைக்கு அனுப்பியிருக்க வேண்டும், ஏனெனில் பிரதமர் தலைமையில் இயங்கும் இந்த அமைச்சரவைக் குழு மட்டுமே ரூ.600 கோடிக்கு மேலான ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிக்க முடியும் என்கிறார் சுவாமி. இந்த ஒப்பந்தத்தின் தொகை ரூ.3,500 கோடி. நிதியமைச்சர் எப்படி அனுமதி அளிக்க முடியும்? என்பதே சுவாமி கிளப்பிய கேள்வி.
இந்நிலையில் சிதம்பரம் கூறும்போது, “இந்த வழக்கு தொடர்பாக ஒவ்வொரு அதிகாரியின் வாக்குமூலங்களையும் சிபிஐ பதிவு செய்துள்ளது. அப்போதைய செயலர், கூடுதல் செயலர் ஆகியோரும் வாக்குமூலம் அளித்துள்ளனர், இவர்கள் நிதியமைச்சரிடம் சரியாகவே இது அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். எனவே சாதாரணமாக வர்த்தக நடைமுறைகளுக்கு எப்படி அனுமதி அளிக்கப்படுகிறதோ அந்த முறையிலேயே ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது” என்றார்.