உத்தரப் பிரதேசத்தில் ஐந்தாம் கட்டமாக 51 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. அந்த தொகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன.
ஐந்தாம் கட்டமாக 51 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 608 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மிக அதிகபட்சமாக அமேதி தொகுதியில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1.84 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 96 லட்சம் பேர் பெண்கள். 5-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
ஐந்தாம் கட்ட தேர்தல் அட்டவணையில் இடம்பெற்றிருந்த ஆலாபூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் சந்திர சேகர் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார். எனவே அந்த தொகுதிக்கான தேர்தல் வரும் மார்ச் 9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 4-ம் தேதி 6-ம் கட்ட தேர்தலும் 8-ம் தேதி 7-ம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளன. மார்ச் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.