இந்தியா

பெங்களூரில் நள்ளிரவு 1 மணி வரை பார், உணவகங்கள் திறக்க அனுமதி

இரா.வினோத்

பெங்களூரில் வரும் 8-ம் தேதி முதல் கடைகள், உணவங்கள் மற்றும் மதுபான விடுதிக‌ளை நள்ளிரவு 1 மணி வரை திறந்து வைத்திருக்க அனுமதி அளிப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் அறிவித்துள்ளார். இதற்கு பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவின் தலைநகராக பெங்களூர் விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பெங் களூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் தொடங்கப் பட்டுள்ளன.

இவற்றில் லட்சக் கணக்கானோர் பணியாற்றுகின் றனர். இவர்களில் இரவு 10 மணிக்கு பணிமுடிந்து திரும்பும் ஊழியர்கள் தங்கள் வசதிக்காக பெங்களூரில் உணவகங்களை நள்ளிரவு வரை திறக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து பரிசீலித்த கர்நாடக அரசு, பெங்களூர் மாநகர எல்லைக்குள் இயங்கும் கடைகள், உணவு விடுதிகள் அனைத்தும் வாரத்தின் 7 நாட்களிலும் நள்ளிரவு 1 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்த‌து.

இதுபோல் மதுபான விடுதிகளுக்கு வாரத்தின் இறுதி நாட்களான‌ வெள்ளி, சனிக்கிழமைகளில் அனுமதி அளித்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெங்களூரில் இரவு வாழ்க்கையை கொண்டாடுவதற்காகவும் இம் முடிவு எடுக்கப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட‌து.

“வரும் 8-ம் தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படும். இக்காலகட்டத்தில் ஏதேனும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டால் இந்த முடிவு மறு பரிசீலனை செய்யப்படும்” என்று கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் அறிவித்தார்.

இந்த முடிவுக்கு பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT