நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆய்வுசெய்த பிறகுதான், லாலு பிரசாத் யாதவை தகுதி நீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மக்களவைத் தலைவர் மீரா குமார் தெரிவித்தார்.
17 ஆண்டு காலம் நிலுவையில் இருந்த கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உள்பட 45 பேரை குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
இதைத் தொடர்ந்து, உடனடியாக லாலு பிரசாத் யாதவ் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அக்டோபர் 3-ம் தேதியன்று லாலு மீதான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் அரசியல்வாதிகளின் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பதவி உடனடியாக பறிக்கப்பட வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, எம்.பி.யாகவுள்ள லாலு தகுதி நீக்கம் உடனடியாக செய்யப்பட வேண்டும்.
இந்த நிலையில், கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மக்களவைத் தலைவர் மீரா குமார் மீரா குமாரிடம் லாலுவின் தகுதி நீக்கம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, “லாலு பிரசாத்துக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அறிந்தேன். தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, அவரைத் தகுதி நீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.
எங்களிடம் இன்னமும் தீர்ப்பு நகல் வரவில்லை. அத்துடன், தண்டனை விவரமும் அறிவிக்கப்படவில்லை. அதன் பிறகுதான் எதையும் முடிவெடுக்க முடியும்” என்றார் மீரா குமார்.