ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஜெர்மனியின் பெர்லின் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு ஊழலை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.
அந்த அமைப்பு சார்பில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளில் ஊழல் குறித்து சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் நேரடியாக கருத்துகள் கேட்கப்பட்டன. கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் 38 பக்கங்கள் அடங்கிய விரிவான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் 69 சதவீத மக்கள், அதாவது 10 இந்தியர்களில் 7 பேர் லஞ்சம் அளித்து மத்திய, மாநில அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக கல்வி நிறுவனங்கள், பொது மருத்துவமனைகள், போலீஸ் துறை, நீதித் துறை, வரி ஆகியவற்றின் சேவைகளைப் பெற லஞ்சம் அளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பொது மருத்துவமனை சேவையைப் பெற லஞ்சம் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக 59 சதவீத இந்தியர்களும், கல்வித் துறையில் லஞ்சம் கொடுத்தே சலுகை பெற்றதாக 58 சதவீத இந்தியர்களும் கூறியுள்ளனர்.போலீஸ் முதலிடம்
இந்தியாவில் போலீஸ் துறையில்தான் மிக அதிகமாக லஞ்சம் 85 சதவீத மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு துறைகள், தொழிலதிபர்கள், உள்ளூர் கவுன்சிலர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், வரி வசூல் அலுவலர்கள் அதிக ஊழலில் ஈடுபடுவதாகவும் இந்திய மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய மதத் தலைவர்கள் ஊழல்வாதிகளா என்ற கேள்விக்கு 37 சதவீத மக்கள், ‘சிலர் ஊழல்வாதிகள்’ என்றும் 23 சதவீத மக்கள், ‘பெரும்பாலான மதத் தலைவர்கள்
ஊழல்வாதிகள்’ என்றும் 11 சதவீத மக்கள், ‘மதத் தலைவர்கள் அனைவருமே ஊழல்வாதிகள்தான்’ என்றும் கருத்து கூறியுள்ளனர்.இந்தியாவைப் பொறுத்தவரை ஏழைகளே அதிக அளவில் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகின்றனர். இதற்கு நேர்மாறாக சீனாவில் பணக்காரர்கள் அதிக அளவில் லஞ்சம் கொடுக்கின்றனர். அங்கு ஏழைகள் லஞ்சம் கொடுப்பது குறைவு.
ஊழல் மிகுந்த ஆசிய-பசிபிக் நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் வியட்நாம் உள்ளது. அங்கு 65 சதவீத மக்கள் லஞ்சம் அளித்து அரசு சேவைகளைப் பெறுகின்றனர். பாகிஸ்தானில் 40 சதவீத மக்களும் சீனாவில் 26 சதவீத மக்களும் லஞ்சம் அளிக்கின்றனர்.
ஊழல் மிகவும் குறைந்த நாடாக ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அங்கு 0.2 சதவீத மக்கள் மட்டுமே லஞ்சம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். தென்கொரியாவில் 3 சதவீத மக்கள் மட்டுமே லஞ்சம் கொடுத்து அரசு சேவைகளைப் பெறுகின்றனர்.