கச்சத்தீவில் ஜாதி, மத, வேறு பாடு இன்றி நடைபெற்ற புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா வின்போது இலங்கையில் உள்ள உறவினர்களை ராமேஸ்வரம் தமிழர் கள் சந்தித்து மகிழ்ந்தனர்.
இயற்கை எழில் கொஞ்சும் கச்சத்தீவு பாக். ஜலசந்தி கடலில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் உள்ளது.
புனித அந்தோணியார் மீனவர்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் கச்சத்தீவில் புனித அந்தோணியார் தேவாலயத்தை நிறுவினார். பின்னர் ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திலோ கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திரு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
1983-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சத்தீவு திருவிழா நிறுத்தப்பட்டது. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுற்ற பின்னர் 2011-ம் ஆண்டில் இருந்து கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா இந்திய–இலங்கை அரசுகளின் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்ததோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 15, 16 தேதிகளில் நடை
பெற்றன. இதில் கலந்து கொள்வதற் காக ராமேஸ்வரத்தில் இருந்து தமிழக பக்தர்கள் 3,160 பேர் 95 விசைப்
படகுகளில் சனிக்கிழமை அதிகாலை கச்சத்தீவுக்கு சென்றனர். இலங்கையில் இருந்து மூவாயிரத்திற் கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் மறை மாவட்டப் பேராயர் சவுந்திரநாயகம் அந்தோணியார் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் கச்சத்தீவு ஆலயத் தின் கொடியை ஏற்றி திருவிழாவை தொடக்கி வைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறப்புத் திருப்பலி பூஜை, அந்தோணி யார் தேர்பவனி ஆகியவை நடைபெற்றது.
வேர்க்கோடு அருட் தந்தை சகாயராஜ் தலைமை வகித்தார். பின்னர் காலை 9 மணி அளவில் கொடியிறக்கத்துடன் கச்சத் தீவு திருவிழா முடிவடைந்தது.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா குறித்து தங்கச்சிமடம் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசீலன் நமது செய்தியாளரிடம் கூறும்போது, இத்திருவிழாவில், பங்கேற்றதன் மூலம், மன்னார் மாவட்டத்தில் உள்ள எனது உறவினர்களை சந்திக்க நேர்ந்தது. அவர்களை மீண்டும் சந்திக்க இன்னும் ஓராண்டு காலம் நான் காத்திருக்க வேண்டும் என்றார்.