இந்தியா

உ.பி.யில் அரசியல் வாரிசுகளுக்கு பின்னடைவு: முலாயம் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தோல்வி

செய்திப்பிரிவு

உ.பி.யில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் வாரிசுகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த உ.பி. சட்டப்பேரவை தேர்தலிலும் பாரதிய ஜனதா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் பலர் தங்கள் வாரிசுகளைத் தேர்தலில் போட்டியிட வைத்தனர். இதில் ஒருசிலரால் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

பாஜக சார்பில் போட்டியிட்டவர் களில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் மகன் பங்கஜ் சிங், முன்னாள் உ.பி. முதல்வர் கல்யாண்சிங்கின் பேரன் சந்தீப் குமார் சிங், லால்ஜி தாண்டன் மகன் அசுதோஷ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், அக்கட்சியின் மூத்த தலைவர் ஹுக்கும் சிங்கின் மகள் மிருக் கங்காசிங் தோல்வியடைந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு பாஜகவுக்கு வந்த சுவாமி பிரசாத் மவுரியா வெற்றி பெற்றாலும் அவரது மகன் உத்கர்ஷ் மவுரியா தோல்வி அடைந்தார். வாரிசு களுக்கு வாய்ப்பு கேட்க வேண் டாம் என்று பாஜக தேசியக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கோரியிருந்தார். இதையும் மீறி உ.பி. தேர்தலில் வாரிசுகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

உ.பி.யில் ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாதியில் முதல் முறையாகப் போட்டியிட்ட மூன்று வாரிசுகளுக்கு படுதோல்வி கிடைத் துள்ளது. அக்கட்சியின் நிறுவனர் முலாயம்சிங்கின் இரண்டாவது மருமகள் அபர்ணாசிங் யாதவ், சகோதரி மகன் அனுராக் யாதவ், பேரன் (லாலுவின் மருமகன்) ராகுல் யாதவ் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

எனினும் சமாஜ்வாதி கட்சியில் 2 வாரிசுகள் வெற்றி பெற்றனர். இக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ரியோத்தி ரமன்சிங்கின் மகன் உஜ் வல்ராம் சிங், ஆசம்கானின் மகன் அப்துல்லா ஆசம் ஆகியோர் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.

காங்கிரஸ் கட்சியில், அக் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பிரமோத் திவாரியின் மகள் ஆராதனா வெற்றி பெற்றார். ஆனால் மூத்த தலைவர் பி.எல்.புணியாவின் மகன் தனுஜ் புணியா, மறைந்த தலைவர் ஜிதேந்திர பிரசாத்தின் மகன் ஜிதின் பிரசாத் ஆகியோர் தோல்வி அடைந்தனர். இவர்களில் ஜிதின் பிரசாத், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய இணை அமைச்சராக இருந்தவர் ஆவார்.

பகுஜன் சமாஜ் கட்சியில் குற்றப் பின்னணி கொண்ட பிரபல அரசியல்வாதியான முக்தார் அன்சாரி சிறையில் இருந்தபடி மாவ் தொகுதியில் வெற்றி பெற் றார். ஆனால், அவரது மகனும் தேசிய துப்பாக்கிச் சுடும் வீரரு மான அப்பாஸ் அன்சாரி, சகோதரர் சிபத்தத்துல்லா அன்சாரி ஆகி யோர் தோல்வி அடைந்தனர்.

சிறையில் இருந்தபடி சுயேச்சை யாகப் போட்டியிட்ட அமன்மணி திரிபாதி வெற்றி பெற்றுள்ளார். ஆயுள்தண்டனை பெற்று சிறை யில் உள்ள இவரது தந்தை அமர் மணி திரிபாதி, சமாஜ்வாதி கட்சி யின் முன்னாள் அமைச்சர் ஆவார்.

SCROLL FOR NEXT