தமிழகத்துக்கு வரும் 20-ம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, வன்முறை வெடித்ததால் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெங்களூருவில் அமைதி நிலவுகிறது. பள்ளி, கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அரசு, தனியார் பேருந்துகள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் என எவ்வித வாகனங்களும் இயங்கவில்லை.
திரையரங்குகள், பொழுதுபோக்கு கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இயல்பு வாழ்க்கை முடங்கியிருந்தாலும் திங்கள் கிழமை போல் வன்முறை சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.
நகர் முழுவதும் மத்திய போலீஸ் படையினரும், மாநில காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 40 கம்பெனி படைகள் கர்நாடகா முழுவதும் குவிக்கப்பட்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மத்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மைசூரு சாலையில் மட்டும் தடையையும் மீறி திரண்ட கும்பல் தமிழக வாகனங்களுக்கு தீ வைத்துள்ளன. 8 லாரிகள் தீக்கிரையானதாகத் தெரிகிறது.
கண்டதும் சுட உத்தரவு:
இதற்கிடையில் வன்முறை வெறியாட்டங்கள் அதிகமாக காணப்பட்ட ராஜகோபால் நகர், காமாட்சிபாளையா, ஹெங்கன்ஹல்லி, மைசூர் சாலை, பெட்ராயனபுரா உள்ளிட்ட 8 இடங்களில் கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் 'கண்டதும் சுடும்' உத்தரவு அமலில் இருக்கிறது.
'மனிதாபிமானம் முக்கியம்'
நிலம், ஜலம், ஜனம் என்ற கோஷங்களோடு போராடி வரும் கன்னட அமைப்புகளுக்கு முதல்வர் சித்தராமையா அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலம், ஜலம், ஜனம் முக்கியம்தான் அதைவிட முக்கியம் மனிதாபிமானம். எனவே மனிதாபிமானத்தை பேணும் வகையில் நடந்துகொள்ளுங்கள் என அவர் தொலைக்காட்சி, வானொலி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வர்த்தகம் பாதிப்பு:
தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்குமாறு கடந்த 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது முதல் மாநிலம் முழுவதும் பரவலாக நடந்துவரும் போராட்டங்களால் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கப்படாததால் கே.எஸ்.ஆர்.டி.சி.-க்கு ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முழுவதும் நிலைமை சீரான பிறகே இழப்பு விவரங்கள் முழுமையாக தெரியவரும்.
ஐடி ஹப் என்று பெயர் பெற்ற பெங்களூருவில் மென்பொருள் நிறுவனங்கள் பலவும் மூடிக்கிடக்கின்றன. ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்ளை வீட்டில் இருந்தே பணி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளன.
விளக்கம் கோரினார் ராஜ்நாத் சிங்:
இதற்கிடையில் கர்நாடகாவில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு மாநில அரசுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். அதேவேளையில், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
அமைச்சரவை கூட்டம்:
நிலைமை இன்று சற்றே கட்டுக்குள் இருந்தாலும் போராட்டங்களை நிரந்தரமாக கட்டுக்குள் கொண்டு வருவது, கர்நாடகா மாநில உரிமைகளை மீட்டெடுப்பது குறித்து சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, மூத்த எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப மொய்லி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
அரசியல் ஆகும் காவிரி பிரச்சினை..
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடக முதல்வர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி மைசூரு, மண்டியாவில் கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், "காவிரி விவகாரத்தை எதிர்க்கட்சிகளான பாஜகவும், மஜதவும் அரசியல் ஆக்கி வருகின்றன. சில கன்னட அமைப்புகளும், விவசாய சங்கங்களும் சுயநல நோக்கத்தோடும், சாதி உணர்வுடனும் சித்தராமையாவுக்கு எதிராக போராடி வருகின்றன. தேர்தலை மனதில் வைத்து இந்த அமைப்புகள் செயல்படுகின்றன" என சித்தராமையாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் வேதனை:
காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகம், தமிழகம் என இரு மாநில மக்களும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முற்பட வேண்டுமே தவிர வன்முறையில் ஈடுபடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். பொறுப்புகளை மனதில் வைத்து இரு மாநில மக்களும் செயல்பட வேண்டும். நாட்டின் நலனே முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.
ஹெல்ப்லைன் எண்கள் அறிவிப்பு:
கர்நடகா போலீஸ் தரப்பில் பொதுமக்களுக்காக ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18004250100, 155365 எண்களை தொடர்பு கொண்டு மக்கள் பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.