காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சச்சின் டெண்டுல்கர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்ற கருத்துகள் முற்றிலும் தவறானவை என காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை நியமன எம்.பி.யாக உள்ள சச்சின், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் பரவின. இதனை, காங்கிரஸ் எம்.பி.யும், பிசிசிஐ துணைத் தலைவருமான ராஜீவ் சுக்லா மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தியாளரிடம் தொலைபேசி வழியாக அவர் கூறியதாவது: சச்சின் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்வார் என்ற தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை. அந்தத் தகவல்கள் முழுவதும் தவறானவை.
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர் பிரசாரத்தில் எப்படி ஈடுபட முடியும் என்றார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, காங்கிரஸுக்காகப் பிரசாரத்தில் ஈடுபடுவாரா எனக் கேட்டபோது, “எதிர்காலத்தை நம்மால் கணிக்க முடியாது. ஓய்வுக்குப் பிறகு அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதை அவர் செய்யட்டும். நாம் அவர் மீது எதையும் திணிக்கக்கூடாது” என்றார் சுக்லா.