பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் மிரட்டி அந்நாட்டு இளைஞர் திருமணம் செய்த இந்தியப் பெண் நேற்று பத்திரமாக நாடு திரும்பினார். அவரை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார்.
டெல்லியைச் சேர்ந்தவர் உஸ்மா. இருபது வயதான இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தாகிர் அலி என்பவரை மலேசியாவில் சந்தித்துள்ளார். அதன்பின் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த மே 1-ம் தேதி உஸ்மா, பாகிஸ்தான் சென்றுள்ளார். கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள புனர் மாவட்டத்தில் கடந்த மே 3-ம் தேதி அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி தாகிர் அலி திருமணம் செய்துள்ளார். அவரிடம் இருந்து தப்பித்து, தலைநகர் இஸ்லாமாபாத் வந்த உஸ்மா, இந்தியத் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.
மே 12-ம் தேதி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் உஸ்மா மனு தாக்கல் செய்தார். அதில், “என்னை தாகிர் அலி கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டார். என்னுடைய ஆவணங்களையும் பறித்து வைத்துள்ளார். எனது குழந்தை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியா திரும்பிச் செல்ல என்னை அனுமதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மோசின் அக்தர் கயானி, உஸ்மாவின் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தாகிர் அலிக்கு உத்தரவிட்டார். அதன்படி அவரும் ஆவணங்களை சமர்ப்பித்தார். எனினும், தனது மனைவியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். உஸ்மா அதற்கு மறுத்ததால் தாகிர் அலியை சந்திக்க அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, உஸ்மாவை பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கடந்த புதன்கிழமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் போலீஸார் பாதுகாப்புடன் உஸ்மா நேற்று அமிர்தசரஸ் அருகே வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவர் இந்திய மண்ணை தொட்டு வணங்கினார். அவரை சந்திக்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்தியா திரும்பிய உஸ்மாவை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் சுஷ்மா கூறும்போது, ‘‘இந்திய மகளே இத்தனை நாட்கள் நீங்கள் பட்ட சிரமத்துக்கு வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு நன்றி
உஸ்மா நாடு திரும்பியதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உஸ்மாவின் சகோதரர் வாசிம் அகமது கூறும் போது, பாகிஸ்தான் சென்றபோது என் சகோதரிக்கு என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. அவர் வீட்டுக்கு வந்த பிறகுதான் இது தெரியவரும். இவ்வளவு விரைவில் அவர் நாடு திரும்புவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரை பத்திரமாக இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். அதுபோல் எனது சகோதரி வந்துவிட்டார். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி” என்றார்.