இந்தியா

ராஜீவ் கொலை வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாக கபில் சிபல் கருத்து

செய்திப்பிரிவு

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மத்திய அரசு ஏற்று நடக்கும் என கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க் கிழமை தீர்ப்பளித்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது: "ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்கப்படக் கூடாது என்பதே அட்டர்னி ஜெனரலின் வாதமாக இருந்தது. ஆனால் தற்போது நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்து தீர்ப்பை அறிவித்துள்ளது. விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடந்தாக வேண்டும். எனவே மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடக்கும்" என்றார்.

பாஜக மவுனம் ஏன்?

அப்சல் குரு தூக்கிலிடப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பாஜகவினர் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காததன் காரணம் ஏன், என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.

மேலும், அப்சல் குரு தூக்கு தண்டனை நிறைவேற்ற காலம் தாழ்த்தப்பட்ட போது அரசு தீவிரவாதத்தை ஒடுக்குவதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சித்த பாஜக இப்போது ஏன் ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பில் மட்டும் மவுனத்தை கடைபிடிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT