ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பு வழங்கக்கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஜல்லிக்கட்டு பிரச்சினையில் சுமுக தீர்வு எட்ட மாநில அரசுடன் பேச்சுவார்த்தையில் இருப்பதால் இவ்வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பு அளிக்க வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க உச்ச நீதிமன்றம் இம்முடிவை எடுத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை காலை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி அடங்கிய அமர்வு முன் ஆஜரான மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்தார்.
அப்போது அவர், "ஜல்லிக்கட்டு நடத்துவதில் தமிழக மக்கள் உணர்ச்சிபூர்வமாக ஒன்றிணைந்துள்ளனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கிறோம்" என வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்துக்கு தீர்ப்பில்லை என இசைவு தெரிவித்தது.