உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக மாடுகளை இறைச்சிக்காக வாகனங்களில் ஏற்றிச் சென்றாலோ, பசுவதையில் ஈடுபட்டாலோ தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, அம்மாநில காவல் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது என்று கூறி தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி, கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், அனைத்து மாநிலங்களின் முதல்வர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாகக் கூறி போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
இதையடுத்து, மாட்டிறைச்சி தடை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகனங் களில் சட்டவிரோதமாக மாடுகளை இறைச்சிக்காக ஏற்றிச் சென்றாலோ, பசுவதையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் பாயும் என அம்மாநில காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக உத்தரபிரதேச காவல் துறை தலைவர் சுல்கான் சிங், அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பசுவதையில் ஈடுபடுபவர்கள் மற்றும் இறைச்சிக்காக மாடுகளை சட்டவிரோதமாகக் கடத்து பவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் பசு பாதுகாப்பு என்கிற பெயரில் சட்டத்தை யாராவது கையில் எடுத்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.