ஆந்திரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தெரிவித்தார்.
ஆந்திரத்தைப் பிரிப்பதை எதிர்த்து சீமாந்திரா பகுதியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆந்திரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. அதுபோன்ற எந்தத் திட்டமும் இல்லை.
சீமாந்திரா பகுதி போராட்டங்கள் குறித்து மத்திய அரசு மிகுந்த கவலை கொண்டுள்ளது. அந்தப் பகுதி மக்களின் நலன்களும் உணர்வுகளும் கருத்தில் கொள்ளப்படும். அதேநேரம் தெலங்கானா பகுதி மக்களின் நலன்களும் பாதுகாக்கப்படும். நதிநீர் பகிர்வு, வேலைவாய்ப்பு, கல்வி உள்பட சீமாந்திரா பகுதி மக்கள் எழுப்பியுள்ள அனைத்துவிதமான பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்படும்.
இதுதொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள 10 அமைச்சர்கள் அடங்கிய குழு அனைத்து தரப்பு பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்துவார்கள்.
மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக போராட்டக் குழுவுடன் ஆந்திர அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் போராட்டம் காரணமாக தென்மாநில மின் தொகுப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார் ஷிண்டே.
இதனிடையே, இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை மத்திய அமைச்சர் பல்லம் ராஜு புறக்கணித்தார். சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த அவர், அண்மையில் ராஜிநாமா கடிதம் அளித்தார். தனது ராஜிநாமா ஏற்கும்படி அவர் பிரதமரை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.