இந்தியா

உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் அதிரடி: 15 பொது விடுமுறை நாட்கள் நீக்கம்

பிடிஐ

உத்தரபிரதேச அரசு தனது அடுத்த அதிரடியாக 15 பொது விடுமுறை தினங்களை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் 42 பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. இதில், 17 நாட்கள் அரசியல் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாட்கள் ஆகும். முந்தைய சமாஜ்வாதி கட்சி ஆட்சியின்போது, முன்னாள் பிரதமர் சந்திரசேகர் (ஏப்ரல் 17), மகரிஷி காஷ்யப் மற்றும் மகரிஷி ரிஷாத்ராஜ் ஜெயந்தி (ஏப்ரல் 5), கர்ஸத் அஸ்மீரி கரிப் நவாஜ் உர்ஸ் (ஏப்ரல் 26), மஹாரானா பிரதாப் ஜெயந்தி (மே 9) ஆகியோரின் பிறந்த தினங்கள் மற்றும் அம்பேத்கரின் நினைவு நாள் (டிசம்பர் 6) ஆகியவற்றை பொது விடுமுறை நாட்களாக அறிவித்தது.

அதிக விடுமுறை தினங்களால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்விப் பணிகள் பாதிக்கப்படுவதாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் கவலை தெரிவித்திருந்தார். இதையடுத்து, நேற்று அவரது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பொது விடுமுறை தினங்களில் இருந்து 15 நாட்களை நீக்க முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி அமைச்சர் காந்த் சர்மா கூறும்போது, “பொது விடுமுறை நாட்களில் இருந்து 15 தினங்கள் நீக்கப்பட்டுள்ளது. அன்றைய தினங்களில் தலைவர்கள் பற்றிய சிறப்பு வகுப்புகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும். திருத்தப்பட்ட விடுமுறை நாட்களின் பட்டியல் விரைவி்ல் அறிவிக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT