பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்ததால் கட்சியில் இருந்து விலக்கப்பட்ட, உ.பி மாநில பாஜக முன்னாள் துணைத் தலைவர் தயா சங்கர் சிங் வெள்ளியன்று கைது செய்யப்பட்டார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் உத்தரப் பிரதேசத்தில் மாநில பாஜக துணைத் தலைவராக இருந்த தயாசங்கர் சிங், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் தேர்தல் அரசியலை, விபச்சாரத்துடன் ஒப்பிட்டு பேசினார்.
4 முறை மாநில முதல்வராக பொறுப்பேற்ற மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த காரணத்தால், தயாசங்கருக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால், தயாசங்கரிடம் இருந்து துணைத் தலைவர் பதவியை பறித்த பாஜக, 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்தும் நீக்கியது.
மாயாவதியை இழிவுபடுத்தியதன் மூலம், பகுஜன் சமாஜ் தொண்டர்களின் மனதை புண்படுத்தியதாகவும், நாடு முழுவதும் உள்ள தலித் சமூகத்தவர்களை இழிவுபடுத்தியதாகவும், அக்கட்சியைச் சேர்ந்த மேவாலால் கவுதம் சார்பில், தயார்சங்கருக்கு எதிராக உத்தரப் பிரதேச போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
கடந்த, 20-ம் தேதி புகார் அளிக்கப்பட்டதும், தயாசங்கர் தலைமறைவானார். கைது நடவடிக்கைக்கு தடை கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தயாசங்கர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உடனடியாக தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், ஆகஸ்ட் 5-ம் தேதி உ.பி மாநில அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது.
கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக கைது வாரண்ட் உடன் தயாசங்கரை உத்தரப் பிரதேச போலீஸார் தேடிவந்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் சிவன் கோயிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், பிஹாரின் பக்ஸார் மாவட்டத்துக்கு உட்பட்ட சின்னிமில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த தயாசங்கரை, அம்மாவட்ட போலீஸார் உதவியுடன், உத்தரப் பிரதேச சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். மாவட்ட எஸ்பி உபேந்திரகுமார் ஷர்மா இத்தகவலை உறுதிப்படுத்தினார்.