நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், விசாரணையை மேலும் தீவிரப்படுத்துமாறு சிபிஐ அமைப்புக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலக்கரி ஊழல் வழக்கில், விகாஷ் மெட்டல்ஸ் மற்றும் பவர் நிறுவனத்தின் தொடர்பு குறித்து வழக்கை அண்மையில் சிபிஐ கைவிடுவதாக அறிவித்தது.
அதற்கான விளக்கத்தைக் கோரியுள்ள சிறப்பு நீதிமன்றம், விகாஷ் மெட்டல்ஸ் மற்றும் பவர் நிறுவனத்தின் தொடர்பு குறித்த விசாரணையை தீவிரமாக மேற்கொள்ளுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கில் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 10-ல் நடைபெறும் என்றும் அன்றைய தினமே விசாரணை நிலவரம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்த நகல்கள் அனைத்து நிலக்கரி ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சி.பி.ஐ. இயக்குநர் மற்றும் டி.ஐ.ஜி.க்களுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 30-ம் தேதி இந்த வழக்கு கடைசியாக விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
சிபிஐ அதிகாரிகளுக்கு அடிப்படை விசாரணை யுக்திகூட தெரியவில்லை என சாடியிருந்தது. நிலக்கரிச் சுரங்க ஒத்துக்கீடு முறைகேடு விசாரணையில் சிபிஐ தரப்பில் பல சருக்கல்கள் இருந்ததாக கூறியிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.