தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் ராச்சகொண்டா பகுதி போலீஸ் ஆணையராக பணியாற்றி வருபவர் மகேஷ் முரளிதர் பகவத். ஐபிஎஸ் அதிகாரியான இவர், இதற்கு முன் சிஐடி துறையில் சிறப்பாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இவரது கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 40 லட்சம் வீடுகள் உள்ளன.
இதில் வசிக்கும் மக்களுக்கு உரிய பாது காப்பு வழங்குவதுடன், சமூக விரோதிகளால் கடத்தப்பட்ட பெண்கள் சிறுவர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்களை மீட்பதற் காக இவர் பாடுபட்டு வருகிறார்.
மேலும் பாலியல் தொழிலில் வலுக்கட்டாய மாக ஈடுபடுத்தப்பட்டு வரும் பெண்களையும் இவர் காப்பாற்றி மறுவாழ்வு அளித்துள்ளார்.
இவரது கட்டுப்பாட்டில் உள்ள ஹைதராபாத் நகர்புறத்தில் கடந்த ஓர் ஆண்டுக்குள் பாலியல் தொழிலுக்காக பயன்படுத்தப்பட்ட 25 விடுதிகள், 5 ஹோட்டல்கள் மற்றும் 25 அடுக்குமாடி குடியிருப்புகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் செங்கல் சூளையில் சட்டத்துக்குப் புறம்பாக பணி அமர்த்தப்பட்ட 350 குழந்தை தொழிலாளர்களையும் இவர் மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளார். இவரது இந்த உயரிய சேவைக் காக அமெரிக்கா இவருக்கு இந்த ஆண்டுக் கான ‘ஹீரோ’ விருது வழங்க உள்ளது. இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் மகேஷ் முரளிதர் பகவத் என்பது குறிப்பிடத்தக்கது.