பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்து சோதனை நடத்திய விவகாரத்தில் விமான நிலைய அதிகாரிகள் இசைஞானி இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டனர்.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இளையராஜா கொண்டுவந்த உடைமைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது இளையராஜா, “இதில் கோயில் பிரசாதமும், உடைக்கப்பட்ட இரண்டு தேங்காய் துண்டுகளும்தான் இருக்கின்றன” என கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த அதிகாரிகள் இந்த பொருட்களை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது கார்த்திக் ராஜா, “மங்களூரு விமான நிலையத்தில் அனுமதித்தது போல நீங்களும் அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். மேலும் நடந்த சம்பவத்தை கார்த்திக் ராஜா புகைப்படமாக எடுத்ததாகவும் தெரிகிறது.
இதனால் கோபமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், இளையராஜாவை நீண்ட நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். மேலும் கார்த்திக் ராஜா எடுத்த புகைப்படங்களை அழிக்குமாறு நிர்பந்தம் செய்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இளையராஜா காத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள், “உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவை காத்திருக்க வைக்க வேண்டாம். அவரை உரிய முறையில் மரியாதையுடன் நடத்தாததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று சத்தம் போட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த விமான நிலைய பாதுகாப்பு உயர் அதிகாரிகள், சோதனை நடத்தியதற்கும், காத்திருக்க வைத்ததற்கும் இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டனர். அதிகாரிகள் வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து சக பயணிகள் கலைந்து சென்றனர்.