இந்தியா

விரைவில் பாஜகவில் இணைகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா: எடியூரப்பாவின் பேட்டியால் கர்நாடகாவில் பரபரப்பு

இரா.வினோத்

காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான‌ எஸ்.எம்.கிருஷ்ணா விரைவில் தங்கள் கட்சியில் இணையப் போவதாக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக‌ மாநிலம் மண்டியாவை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா (84) கடந்த 46 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் நீடித்து வந்தார். திடீரென கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதனால் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா விரைவில் பாஜகவில் ஐக்கியமாகப் போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்தார். இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது:

காங்கிரஸில் இருந்து விலகிய மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா விரைவில் பாஜகவில் இணைய உள்ளார். பிரதமர் மோடி மீதான நம்பிக்கை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் கட்சியில் இணைவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இது நூறு சதவீதம் உறுதிபடுத்தப்பட்ட தகவல்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆபரேஷன் தாமரை

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணைய முடிவு செய்திருப்பதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறுவதற்கும் பிரகாசமான வாய்ப்பு அமைந் திருப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸுக்கு சிக்கல்

தவிர இதற்கிடையே மண்டியாவைச் சேர்ந்த மூத்த தலைவர் மாதே கவுடா, முன்னாள் எம்எல்ஏ விக்ராந்த் தேவகவுடா மற்றும் குல்பர்கா, பீஜப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந் துள்ள காங்கிரஸின் பிற மூத்த தலைவர்கள் பாஜக மீண்டும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை அரங்கேற்றி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

SCROLL FOR NEXT