இந்தியா

பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் அமரிந்தர் சிங்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பு

செய்திப்பிரிவு

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான அமரிந்தர் சிங் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

பஞ்சாபில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

காங்கிரஸின் மாநிலத் தலைவர் அமரிந்தர் சிங்கை கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் துணிச்சல் அந்த கட்சிக்கு இல்லை என ஆளும் சிரோமணி அகாலி தளமும் ஆம் ஆத்மி கட்சியும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன.

இந்நிலையில் பஞ்சாபின் மஜிதா பகுதியில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: பஞ்சாப் மாநிலத்தை மாற்றவேண்டும் என்றால் அதற்கு சரியான நபர் அமரிந்தர் சிங் தான். அவர் மக்கள் ஆதரவுடன் மாநிலத்தில் மாற்றத்தை கொண்டு வருவார். தடம் புரண்டுபோயுள்ள மாநிலத்தை சரியான பாதைக்கு கொண்டுவருவார்.

மாநில மக்களால் பஞ்சாப் ஆளப்படும். மாநிலத்தைச் சேர்ந்தவரே முதல்வராக வருவார். அவர் (அமரிந்தர் சிங்) இங்கே அமர்ந்திருக்கிறார். எங்கோ இருந்தபடி மாநிலத்தை ஆளப் பார்க்கிறார்கள். ஒரே நேரத்தில் டெல்லிக்கும் பஞ்சாபுக்கும் முதல்வராக பார்க்கிறார்கள். அதற்கு அவசியம் இருக்காது. ஆட்சியில் இருக்கும் பாதல் குடும்பத்தினர் பஞ்சாபை சீரழிக் கிறார்கள். ஊழலை ஒழிப்போம் என பேசும் பிரதமர் நரேந்திர மோடி பாதல் குடும்பத்துக்கு பக்கபலமாக நிற்கிறார்.

பொய் வாக்குறுதிகளையும் வெற்று பேச்சுகளையும் முன் வைத்து மக்களை மடையர்களாக்க ஆம் ஆத்மி கட்சியும் கேஜ்ரிவாலும் முயற்சிக்கின்றனர்.

மாநிலத்தில் போதை பழக்க மும், போதைப்பொருள் புழக்கமும் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதை ஒழிக்க அரசு சட்டம் கொண்டுவரும். போதை மருந்து வியாபாரத்தில் இருப்போர் சிறையில் தள்ளப்படு வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT