சீனப்படையினர் சமீபத்தில் இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவிய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ. கே. அந்தோணி இது போன்ற சம்பவங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.
இந்தியா-சீனா இடையே எல்லை தீர்மானங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அந்தோணி, "சீனா படையினர் ஊடுருவல் விவகாரத்தில் இரு நாடுகள் இடையே சுமூகமான தீர்வு காணப்படும்." என்று தெரிவித்தார்.
சமீபத்தில் இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி உள்ளே நுழைந்த சீனப்படையினர், இந்தியர்கள் 5 பேரை கைது செய்தனர். இரு நாடுகளிடையே நடந்த கொடி அமர்வு கூட்டத்திற்கு பின், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பேசிய அந்தோணி, "நாங்கள் நாட்டில் அமைதியை நிலைநாட்டவே முடிவு செய்துள்ளோம். எல்லை பிரச்சினை தொடர்பாக திருப்திகரமான தீர்வு காணும் வரை, ஊடுருவல் சம்பவங்களுக்கு அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். இந்த விவகாரத்தில் நாங்கள் தாமதிக்காமல் தீர்வு கண்டு வருகிறோம். இது முன்னேற்றமே ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் இரு நாடுகளிடையே எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடக்கும் பிரச்சினைளுக்கு தீர்வு காணும் வகையில் எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.