இந்தியா

கர்நாடக கிறிஸ்தவ ஆலய குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: 16 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

இரா.வினோத்

கர்நாடக கிறிஸ்தவ தேவாலய குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் ஷெய்கீர் அமீர் அலி, 16 ஆண்டுகளுக்கு பிறகு ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2000 ஆண்டு ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஹூப்ளி, குல்பர்கா உள்ளிட்ட நகரங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இது தொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸார் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேர் உட்பட 29 பேரை தேடி வந்தனர். பெங்களூரு, பெலகாவி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 11 பேருக்குத் தூக்கு தண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. இந்த வழக்கில் தலை மறைவாக உள்ள 6 பேரும் பாகிஸ் தானுக்கு தப்பியோடி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக சிஐடி கூடுதல் காவல் இயக்குநர் பிரதாப் ரெட்டி தலைமையிலான தனிப்படையினர் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஷெய்கீர் அமீர் அலியை (36) ஹைதராபாத்தில் கைது செய்துள்ளனர்.

16 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ள ஷெய்கீர் அமீர் அலி தெலங்கானா மாநிலம், நல்கொண்டாவை சேர்ந்தவர். இவர் பல்வேறு முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களுடன் தொடர்பு வைத் திருந்தது தெரிய வந்துள்ளது. எனவே ஷெய்கீர் அமீர் அலியை சிஐடி போலீஸார் பெங்களூரு அழைத்துவந்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற 5 பேர் குறித்த விவரங்களைச் சேகரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஷெய்கீர் அமீர் அலி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 7 பிரிவுகளின் கீழும், வெடிகுண்டு தடுப்பு சட்டத்தில் 3 பிரிவுகளின் கீழும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT