இந்தியா

இமாச்சல முதல்வர் மீது பாஜக லஞ்சப் புகார் - பிரதமருக்கு அருண் ஜேட்லி கடிதம்

செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள இமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்ர சிங் லஞ்சம் வாங்கியதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி பிரதமருக்கு கடிதம் மூலம் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது; கடந்த 2002-ல் ஒரு நீர்மின் திட்டத்தை நிறுவும் பணி வென்சர் இன்ஜினியரிங் அண்ட் டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கத் தவறியதால், அந்த திட்டம் 2004-ல் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வந்த வீரபத்ர சிங், அந்த நிறுவனத்துக்கு மேலும் பத்து மாதம் அவகாசம் அளித்தார். இதற்காக, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வி.சந்திரசேகர், வீரபத்ர சிங்குக்கு ரூ.1.5 கோடியும் அவரது மனைவி பிரதிபாவிற்கு ரூ.2.5 கோடியும் அளித்துள்ளார்.

இதுபோல், மற்றொரு திட்டத் துக்காக முதல்வரின் பிள்ளைகள் மற்றும் அவரது தனி அதிகாரி ஆகியோருக்கு தரணி இன்ப்ரா ஸ்ட்ரக்சர் நிறுவனத்தில் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். லஞ்சம் வாங்குவோர் மீது நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் கூறுவது உண்மையாக இருந்தால், வீரபத்ர சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் இவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, ஆதர்ஷ் ஊழல் அறிக்கை தொடர்பாக ராகுல் மற்றும் சோனியாவிற்கு வந்த கோபம் நியாமானதா அல்லது நாடகமா என்பது தெரிந்து விடும்.

இதற்கு முன்பு, வீரபத்ர சிங் உருக்குத் துறை அமைச்சராக இருந்தபோதும் 1989-ல் அம் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோதும் பல திட்டங்களில் லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடர்பான டெலிபோன் பதிவுகளும் அப்போது வெளியானதுடன் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது மூன்றாவது குற்றச்சாட்டு என்றார்.

உயர் பதவியில் உள்ளவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழும்போது, நடவடிக்கை எடுப்பதில் உள்ள சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் நீண்ட போராட்டங்களுக்கு பின் நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது நினைவுகூரத் தக்கது.

SCROLL FOR NEXT