வரும் 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறிய நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்படும். அவற்றின்மூலம் 30 கோடி மக்கள் பயனடைவார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம், ஆஜ்மீர் அருகேயுள்ள கிஷான்கர் நகரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் மேலும் பேசுகையில், “இந்தியாவில் இப்போது பெரிய நகரங்களில் மட்டுமே விமான நிலையங்கள் உள்ளன. இந்த நிலையை மாற்றி சிறிய நகரங்களையும் விமானச் சேவை மூலம் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, வரும் 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறிய நகரங்களில் விமான நிலையங்களை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம்
முதல்கட்டமாக முஸ்லிம்களின் புனித தலமான ஆஜ்மீர் அருகே 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிஷான்கர் நகரில் விமான நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் 2016-ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும்.
கடந்த ஓராண்டில் 16 கோடி இந்தியர்கள் விமானச் சேவையை பயன்படுத்தியுள்ளனர். சிறிய நகரங்களில் விமான நிலையங்கள் அமைப்பதன் மூலம் 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 30 கோடியாக அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங் பேசும்போது, சிறிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. அவற்றை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.