இந்தியா

சுனந்தா வழக்கில் பாக். பத்திரிகையாளர் மெஹர் தராரிடம் மீண்டும் விசாரணை

பிடிஐ

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் தொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தராரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

டெல்லி கிழக்கு சரக இணை ஆணையர் ஆர்.பி.உபாத்யா இதனைத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஒருமுறை தராரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இப்போது மீண்டும் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம். ஏற்கெனவே கேள்விகளை தயாரித்து வைத்திருந்தோம். அதை அவரிடம் கொடுத்து பதில் பெற்றுக் கொண்டோம்" என்றார்.

விலகாத மர்மம்:

சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் (52) கடந்த 2014-ம் ஆண்டு டெல்லி நட்சத்திர ஓட்டலில் இறந்து கிடந்தார். சுனந்தா இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் கடைசியாக மெஹர் தராரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.

சசி தரூருக்கும் பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த மெஹர் தராருக்கும் இடையே நட்பு இருந்த நிலையில், இவர்களது உறவு குறித்து சுனந்தா புஷ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தான் முதலில் காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பியது, இப்போது பத்திரிகையாளர்களை அனுப்புகிறது" என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் மெஹர் தராரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஓராண்டுக்கு முன்னர் இந்த விசாரணை நடைபெற்றது. சுனந்தா வழக்கில் இன்னும் மர்மங்கள் விலகாத நிலையில் தற்போது மீண்டும் மெஹர் தரூரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மெஹர் தராரின் திருமண வாழ்க்கை:

பத்திரிகையாளரான மெஹர் தராருக்கும் பாகிஸ்தான் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். தற்போது 45 வயதாகும் மெஹர் தரார் தனது மகனுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT