செலவுகள் எதுவுமின்றி, வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண உதவும் மெகா லோக் அதாலத் நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையிலும், மக்களுக்கு விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் வட்டார அளவிலான கீழமை நீதிமன்றம் தொடங்கி, உச்ச நீதிமன்றம் வரை நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறும் மெகா லோக் அதாலத் இந்தியா முழுவதும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் பல லட்சம் வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில்
தமிழ்நாட்டிலும் கீழமை நீதிமன்றங்கள் தொடங்கி உயர் நீதிமன்றம் வரை சனிக்கிழமை நடைபெறும் லோக் அதாலத்துக்காக விரிவான ஏற்பாடுகளை மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு மேற்கொண்டுள்ளது.
வழக்கின் வகைகள்:
சட்டத்தினால் தீர்க்கப்படக் கூடிய எந்தவொரு பிரச்னையையும், நீதிமன்றத்துக்குச் செல்லக் கூடிய தன்மை இருந்தால் அந்த வழக்குகள் அனைத்துக்கும் லோக் அதாலத் மூலம் தீர்வு காணலாம்.
குறிப்பாக, காசோலை தொடர்பான வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், தொழில் தகராறுகள் மற்றும் தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளத் தன்மையுள்ள வழக்குகள், நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகளுக்கு லோக் அதாலத்தில் தீர்வு காண முடியும்.
மேலும், வங்கிக் கடன் பிரச்னைகள், வாடகை விவகாரங்கள், விற்பனை வரி, வருமான வரி, மறைமுக வரி தொடர்பான பிரச்னைகள், உள்ளிட்ட வழக்குகளுக்கும் லோக் அதாலத்தை அணுகி தீர்வு காணலாம்.
பயன்கள்:
மக்கள் நீதிமன்றத்தில் செலவு எதுவுமின்றி, விரைவாக தீர்வு கிடைக்க ஏற்பாடு உள்ளது. வழக்குகளில் தீர்வு ஏற்பட்டதுமே வழக்கின் தீர்ப்பு அல்லது உத்தரவு நகல் உடனடியாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வழக்குக்காக ஏற்கெனவே செலுத்திய முத்திரைத் தாள் கட்டணத்தையும் திரும்பப் பெறலாம். அனைத்து தரப்பினரின் சம்மதத்துடன் தீர்வு காணப்படுவதால் வழக்கில் வென்றவர், தோற்றவர் என்ற நிலைமை ஏற்படாது. மேலும் மக்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு கிடையாது என்பதால் வழக்கும் பிரச்னையும் நீடித்துக் கொண்டே செல்லாமல் முடிவுக்கு வந்து விடுகிறது.
அந்த வகையில் லட்சக்கணக்கான வழக்குகளுக்கு சனிக்கிழமை நடைபெறும் மெகா லோக் அதாலத்தில் தீர்வு காணப்படுகிறது. இந்த லோக் அதாலத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் அந்தந்த ஊர்களிலும் நீதிமன்றங்களில் இயங்கும் சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகி, அடுத்து நடைபெறும் லோக் அதாலத்தில் கலந்து கொள்ளலாம்.