தெலங்கானா பிரச்சினையில் காங்கிரஸில் இருந்து விலகிய ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார்.
தெலுங்கு மக்களின் கௌரவத்தையும் தன்மானத்தையும் நிலைநிறுத்தும் வாக்குறுதியோடு, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தாம் புதிய கட்சி தொடங்குவதாக இன்று (வியாழக்கிழமை) அவர் அறிவித்தார்.
மார்ச் 12-ஆம் தேதி ஆந்திராவின் கடற்கரை பகுதியிலுள்ள ராஜமுந்திரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை அறிவிக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.
காங்கிரஸின் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததால், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி.க்களுடன் இணைந்து அவர் இந்தக் கட்சியைத் தொடங்குகிறார்.
இது குறித்து கிரண்மார் ரெட்டி மேலும் கூறும்போது, "மாநிலத்தின் பிரிவினையால் ஆந்திர மக்கள் மனதளவில் காயமடைந்துள்ளனர். அவர்களின் கெளரவத்தையும், தன்மானத்தையும் நிலைநிறுத்து வண்ணம் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளோம். மரபுகளை மீறி அவர்கள் (மத்திய அரசு) ஆந்திர மக்களை அவமரியாதைக்கு உள்ளாக்கியுள்ளனர். அதைப் போக்கவே நாங்கள் புதுக் கட்சி தொடங்குகிறோம்.
இரு முறை ஆந்திர மாநிலத்தின் முதல்வராகவும், 10 வருடங்களாக எதிர்கட்சித் தலைவராகவும் உள்ள சந்திரபாபு நாயுடு தெலங்கானா பிரிவினை குறித்து வாயைத் திறக்காமல் இருப்பது வெட்கக்கேடாக உள்ளது. அதேபோல ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் ஜகன் மோகன் ரெட்டியும், ஒருங்கிணைந்த ஆந்திரத்திற்கு ஆதரவாக பேசுவது போல் காண்பித்துக் கொண்டாலும், சீமாந்திராவின் முதல்வராக ஆசைப்படும் அவர் ஆந்திராவின் பிரிவினையே ஆதரிக்கிறார்" என்றார் கிரண்குமார் ரெட்டி.
வரும் தேர்தலில், சீமாந்திரா பகுதியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகளுக்கே ஆதரவு இருப்பதாக சில கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. அவர்களை எதிர்த்தே தேர்தலில் போடியிடவுள்ளதாக கிரண் குமார் ரெட்டி கூறியுள்ளார்.
முன்னதாக, தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸில் இருந்து விலகிய கிரண் குமார் ரெட்டில், பிப்ரவரி 19-ஆம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.