இந்தியா

அருணாச்சல் இளைஞர் மீது தாக்குதல்: பெங்களூரு போலீஸார் தீவிர விசாரணை

இரா.வினோத்

அருணாச்சல பிரதேசம் லாங்டிங் மாவட்டத்தைச் சேர்ந்த குவாதும் கன்ஹம் (24) பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் உள்ள கேளிக்கை விடுதியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வேலையை முடித்துவிட்டு தனது அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப் போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக தாக்கி யது. இதனால் படுகாயமடைந்த கன்ஹம் நிமான்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கோரமங்களா போலீஸார் தாமாக முன்வந்து, மர்ம கும்பல் மீது இந்திய தண்டனை சட்டம் 326-ம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கன்ஹம் வேலை செய்த கேளிக்கை விடுதி, உடன் தங்கி இருந்த நண்பர்கள் மற்றும் அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். கோரமங்களா - விவேக் நகர் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் தெளிவாக இல்லை என்பதால் வீடியோவை தடயவியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தகவல் அறிந்த அருணாச்சல பிரதேச மாநில எம்எல்ஏக்கள் குழுவினர் நேற்று பெங்களூரு வந்தனர். பெங்களூரு மாநகர ஆணையர் பிரவீன் சூட்-ஐ சந்தித்து வழக்கு தொடர்பாக விசாரித்தனர்.

இது தொடர்பாக அருணாச்சல பிரதேச எம்எல்ஏ காப்ரியேல் டி. வாங்ஸு கூறும்போது, “இந்த தாக்குதல் இனவெறியுடன் நடத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வசிக்கும் எங்கள் மாநில மக்களுக்கு அரசும், போலீஸாரும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

எங்கள் தோற்றத்தில் வேறு பாடு இருப்பதால் சீனர்கள் என நினைக்கிறார்கள். மக்களிடையே பரவியுள்ள இந்த மனோபாவத்தை களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதேபோல கர்நாடகாவில் உள்ள அருணாச்சல பிரதேச மாணவர் சங்கத் தலைவர் டோகோ ஜான் கூறும்போது, “இது இனவெறி தாக்குதல் போல தெரிகிறது. இதைக் கண்டித்து சங்கத்தின் சார்பில் பெங்களூருவில் விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT