நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மதரசாக்களில் மதிய உணவு வழங்கவும் கழிவறைகள் கட்டுவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், ‘மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை’ செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் பொதுக் குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நக்வி கூறியதாவது:
நாடு முழுவதும் இஸ்லாமியக் கல்வியைக் கற்றுத் தரும் மதரசாக்கள் செயல்படுகின்றன. இவற்றை புதுப்பிக்கும் வகையில், ஒரு லட்சம் மதரசாக்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. அடுத்த நிதியாண்டுக்குள் இத் திட்டம் நிறைவேற்றப்பட்டு விடும்.
மேலும் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மதரசாக்களில் மதிய உணவு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், 3டி பார்முலாவின்படி (டீச்சர்கள், டிபன், டாய்லெட்) மதரசாக்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் டிபன் என்பது மதிய உணவு திட்டமாகும். அத்துடன் மதரசாக்களை நவீனப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, மதக்கல்வியுடன் அறிவியல் தொழில்நுட்ப கல்வியையும் மதரசாக்களில் அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
மதரசாக்கள் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மவுலானா ஆசாத் அறக்கட்டளை விரும்புகிறது. அதன்படி மாணவிகளுக்கு ‘பேகம் ஹசரத் மஹல் தேசிய ஸ்காலர்ஷிப்’ அதிகரிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 20 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை இந்த நிதி ஆண்டுக்குள் 45 ஆயிரமாக உயர்த்த விரும்புகிறோம். அடுத்த ஆண்டு 5 லட்சம் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் நக்வி கூறினார்.