ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டு வாங்கியது. ரூ.3,500 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தில் 100 சதவீத பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) இதற்கான அனுமதியை வழங்கியது. ரூ.600 கோடிக்கு மேல் முதலீடு உள்ள திட்டங்களை மத்திய பொரு ளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் அனுமதிக்கு அனுப்ப வேண்டும் என்ற விதிமுறை இருந்தும், முறை கேடாக அனுமதி வழங்கப்பட் டுள்ளது என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டி இருந்தார்.
இதன்பேரில், நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் ஒரு கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் விசாரணை அறிக்கை விவரங் களைத் தாக்கல் செய்ய இன்னும் ஒருமாதம் ஆகும். இந்த தகவல் சுப்பிரமணியன் சுவாமிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் உள்ள விதிமுறை மீறல் குறித்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. அம லாக்கப் பிரிவு சார்பில் நேற்று விசாரணை அறிக்கை ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசா ரணை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் குறித்து சிபிஐ தொடர்ந்த வழக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்குகளை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து வந்தது.
இந்த வழக்குகளில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.