இந்தியா

நரேந்திர மோடியை சந்திக்கத் தயார்: பிரிட்டன் பிரதமர் கேமரூன்

செய்திப்பிரிவு

இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், குஜராத் முதல்வரும், ப.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக தெரிவிதுள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை செல்லும் வழியில், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஒருநாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.

இந்தியா வந்துள்ள பிரதமர் கேமரூன், டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார்.

அப்போது, விசா நடைமுறைகள், வர்த்தகம், பொருளாதாரம், மற்றும் இரு நாட்டு நல்லுறவு குறித்து இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.

கேமரூனிடம், மோடியை சந்திப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு: ' ஏன் கூடாது. உரிய நேரத்தில் நரேந்திர மோடியை சந்திப்பேன். அவரை சந்திப்பது நல்லது. தேர்தலில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது மக்கள் கைகளில் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க தயாராகவே இருக்கிறோம்.' என்றார். காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் முடிவு சரியானதே என்றும் கேம்ரூன் தெரிவித்தார்.

தொடர்ந்து கேமரூன் கோல்கட்டா புறப்பட்டு செல்கிறார். அங்கு மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்கும் அவர், மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திப்பார் என தெரிகிறது.

SCROLL FOR NEXT