இந்தியா

தீவிரவாத குழுக்கள் பட்டியலில் 4-வது இடத்தில் மாவோயிஸ்ட்கள்

செய்திப்பிரிவு

கடந்த 2015-ம் ஆண்டு உலகம் முழுக்க 11,744 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றில் 28,328 பேர் கொல்லப் பட்டனர், 35,320 பேர் காயமடைந் தனர். தீவிரவாத தாக்குதல்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது இடம்பிடித்துள்ளது.

இந்தியாவில் நடத்தப்பட்ட 791 தீவிரவாத தாக்குதல்களில் 43 சதவீதம் நக்ஸல் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளன. 2015-ல் இந்தியாவில் 289 பேர் தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்துள் ளனர்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்புடைய அமைப்பான தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கான பதிலடி தொடர்பான ஆய்வுகளுக்கான தேசிய கூட்டமைப்பு சார்பில் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, தலிபான், ஐஎஸ், போகோ ஹராம் ஆகிய மூன்று தீவிரவாத அமைப்புகள் மிக பயங்கரமானவையாக உள்ளன. இவற்றுக்கு அடுத்த இடத்தில் மாவோயிஸ்ட்கள் உள்ளனர்.

தலிபான்கள் 1,093 தாக்குதல் களை நடத்தி, 4,512 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்துள்ளனர். ஐஎஸ் அமைப்பு 931 தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில், 6,050 பேர் உயிரிழந்துள்ளனர். போகோ ஹராமுக்கு 491 தாக்குதல்களில் தொடர்புள்ளது. இதில், 5,450 பேர் உயிரிழந்துள்ளனர்.

2015-ம் ஆண்டு இந்தியாவில் 343 தாக்குதல்களை மாவோயிஸ்ட்கள் நடத்தியுள்ளனர். இதில், 176 பேர் உயிரிழந்துள்ளனர்.

குர்திஸ்தான் வொர்க்கர்ஸ் அமைப்பு 5-வது இடத்தில் உள்ளது. இது 238 தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில், 287 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களில் பாதிக்கும் மேற்பட்டவை சத்தீஸ்கர் (21%) மணிப்பூர் (12%) ஜம்மு-காஷ்மீர் (11%), ஜார்க்கண்ட் (10%) ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெறுகின்றன.

இந்த மாநிலங்களில் 2014-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2015-ல் தீவிரவாத தாக்குதல்கள் இருமடங்கு அதிகரித்துள்ளன.

இந்தியா முழுவதும் 45 தீவிரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. நக்ஸல்கள் மட்டுமே 43 சதவீத தாக்குதல்களுக்கு காரணமாக இருந்துள்ளனர். 2014-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் தீவிரவாத அமைப்புகளால் கடத்தப்பட்ட, பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 305-லிருந்து 862 ஆக உயர்ந்துள்ளது.

2014-ம் ஆண்டு 163 பேரைக் கடத்திய நக்ஸல்கள், 2015-ல் 707 பேரைக் கடத்தியுள்ளனர். 2014-ம் ஆண்டில் 50 அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் ஒரே சமயத்தில் கடத்தப்பட்ட அல்லது தாக்கப்பட்ட சம்பவம் நடைபெறவில்லை. ஆனால், 2015-ல் அதுபோன்று 7 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

உள்துறை அமைச்சக தகவல்களின்படி, 2010 முதல் 2015-ம் ஆண்டு வரை நக்ஸல் தாக்குதல்களில் 2,162 குடிமக்கள், 802 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் பெரும்பாலானவர்கள் பழங்குடியினர். காவல்துறைக்கு உளவு சொல்பவர்கள் என குற்றம்சாட்டப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தீவிரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தைப் பிடித்திருந்தாலும், இத்தாக்குதல்களால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவு.

SCROLL FOR NEXT