‘ஸ்நாக்ஸ்’ என்ற பெயரில் உடலைக் கெடுக்கும் கண்ட கண்ட நொறுக்குத் தீனிகளை உட்கொள்ளும் கலாச்சாரம், இந்திய இளைஞர்கள் மற்றும் வசதி படைத்த குடும்பத்தினர் மத்தியில் மாறி வருவதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நொறுக்குத் தீனிகளை ஆர்வமாக ஏராளமானோர் உட்கொள்வதால் உடல் பருமன் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உணவு பழக்கவழக்கங்களை முறைப்படுத்த வேண்டும் என்று பல வளர்ந்த நாடுகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் ‘இப்சாஸ்’ சந்தை நிலவர ஆய்வு (மார்க்கெட் ரிசர்ச்) நிறுவனம் சார்பில், இளைஞர்கள் மற்றும் வசதி படைத்த குடும்பத்தினர் மத்தியில் ஆய்வு நடத்தப்பட்டது. டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சண்டீகர், நாக்பூர், போபால் மற்றும் கோவை ஆகிய நகரங்களில் வசிக்கும் 3,037 பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
‘மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் என்னென்ன நொறுக்குத் தின்பண்டங்களை சாப்பிடுவீர்கள்?’ என்ற கேள்விக்கு, 97 சதவீதம் பேர், பாதாம் பருப்பை தங்கள் விருப்பமாக தெரிவித்துள்ளனர். கோவை, பெங்களூரு, சண்டீகர் ஆகிய நகரங்களில் 99 சதவீதம் பேர், பாதாம் பருப்பை தங்கள் விருப்பமான ‘ஸ்நாக்ஸ்’ எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக, பல்வேறு பழவகைகளும், உலர் பழங்களையும் தங்கள் விருப்பமாக தெரிவித்துள்ளனர். இவர்களைப் பொறுத்தவரை, ‘நொறுக்குத் தீனி என்பது, மகிழ்ச்சியின் வெளிப்பாடு. மகிழ்ச்சியான தருணங்களில் தங்கள் நாக்குக்கு ருசியாக, சூடான, மொறுமொறுப்பான, புதுவிதமான நொறுக்குத் தீனிகளை உண்ண வேண்டும்.
ஆனால் அதே சமயத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும், சத்தான, ‘பாசிடிவ்’ மனநிலையை வெளிப்படுத்தும் உணவுகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் இன்றைய இளம் தலைமுறையினரும், மேல்தட்டு மக்களும் அக்கறையுடன் உள்ளனர்.
அதேபோல், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர் களில், 30 சதவீதம் பேர், மன அழுத்தம் அதிகமாக காணப்படும் நிலையில், பசியில்லாமலே அதிக நொறுக்குத் தீனி உண்ணத் தோன்றுவதாகத் தெரிவித்துள்ளனர்.