இந்தியா

நொய்டாவில் ஒலி மாசு ஏற்படுத்திய பஞ்சாபி கிளப்புக்கு ரூ.7 லட்சம் அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு

பிடிஐ

அதிக ஒலி மாசு ஏற்படுத்திய குற்றத்துக்காக, மருத்துவமனை அருகில் உள்ள பஞ்சாபி கிளப்புக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

டெல்லி அருகே உள்ள நொய்டாவின் செக்டார் 29-ல் வசிப்பவர் ராஜீவ் ராய். இவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘நான் வசிக்கும் பகுதியில் 40 படுக்கை வசதி கொண்ட பரத்வாஜ் மருத்துவமனை மற்றும் சர்ச் ஆகியவை உள்ளன. மருத்துவனையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் விருந்து மண்டத்துடன் கூடிய பஞ்சாபி கிளப் உள்ளது. இந்தப் பகுதி ஒலி எழுப்ப கூடாத இடமாகும். ஆனால், விருந்து மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின்போது, ஒலி மாசு ஏற்படுத்துகின்றனர். அத்துடன் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளையும் (லவுட் ஸ்பீக்கர்கள்) பயன்படுத்து கின்றனர். இவற்றுக்கு முழு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

அந்த மனுவை தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜாவத் ரகீம் தலைமையிலான அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

பஞ்சாபி கிளப், விருந்து மண்டபத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. நிர்ண யிக்கப்பட்ட ஒலி அளவை பின் பற்றிதான் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். உத்தரபிரதேச மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது பஞ்சாபி கிளப்புக்கு சென்று ஒலி மாசு ஏற்படுத்தாமல், விதிகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் திடம் அனுமதி பெறாமல், 10 ஆண்டுகளாக கிளப் இயங்கி வருவதும், அதிக ஒலி மாசு ஏற்படுத்துவதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதி மக்கள், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உடல்நலம் பாதிக்கும் வகையில் ஒலி மாசு ஏற்படுத்தி வந்துள்ளனர்.

எனவே, கிளப் உரிமை யாளர்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் ரூ.5 லட்சத்தை மருத்துவமனைக்கும், விதிகளை மீறியதற்காக ரூ.2 லட்சத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மேலும், ஒலியைக் கட்டுப்படுத்த விருந்து மண்டபத்தில் 2 அடுக்கு கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கவும், வெளிப்பகுதிக்கு ஒலி அதிகமாக செல்லாதவாறு வளாகத்தைச் சுற்றி உயர்ந்த மரங்களை வளர்த்து சுவர் போல் அமைக்கவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT