டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவை அழைக்கலாம் என துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அளித்த பரிந்துரைக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
2013 டிசம்பரில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 32 இடங்களிலும் ஆம் ஆத்மி 28 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங் களிலும் வெற்றி பெற்றன.
70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆட்சி யமைக்க 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. திடீர் திருப்பமாக ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வரானார்.
ஆனால் லோக்பால் மசோ தாவை நிறைவேற்ற முடியாததால் 49 நாள் ஆட்சிக்குப் பிறகு அர்விந்த் கேஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த பிப்ரவரி முதல் டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மறுதேர்தல் நடத்தாததை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த செப்டம்பர் 5-ல் பரிந்துரை செய்தார். இதற்கு ஒப்புதல் அளித்து குடியரசு தலைவர் பிரணாப், நஜீப் ஜங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தத் தகவல், உச்ச நீதி மன்றத்தின் வழக்கு விசாரணையில் நஜீப் ஜங் நேற்று அளித்த பதில் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.பாஜகவைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.க்களாகிவிட்ட நிலையில் தற்போது அந்தக் கட்சியில் 29 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். இவர்களுடன் சுயேச்சை எம்.எல்.ஏ. ராம்வீர் ஷோக்கிங் மற்றும் ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப் பட்ட வினோத்குமார் பின்னி ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கின்றனர். டெல்லியின் 3 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 25-ல் இடைத் தேர்தல் நடைபெறு கிறது. மூன்றிலும் பாஜக வெற்றி பெற்றால்கூட பெரும்பான்மையை எட்ட முடியாது.
இதுகுறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தலில் வென்று பிரதமராகும் நோக்கத்துடன் வாரணாசியில் போட்டியிட கேஜ்ரிவால் கிளம்பினார். அங்கு கிடைத்த பதிலடியில் டெல்லிக்கு திரும்பிவிட்டார். எங்களுக்கு துணைநிலை ஆளுநரிடம் இருந்து அழைப்பு வந்தால் அதற்கு உகந்த பதிலை அனுப்புவோம். அது, கண்டிப்பாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்ட தாக இருக்கும்’’ என்றார்.