டெல்லி மாநில நிர்வாகம் தொடர்பாக, மாநில அரசு – மத்திய அரசு இடையே நிலவி வரும் பூசலில் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ள நிலையில், அதில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நிலவி வருகிறது. டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை தலைவர் நியமனம் உட்பட மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு பறித்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் அரசு பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் அரசு ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் உயர் நீதிமன்றத்தில் டெல்லி அரசு தாக்கல் செய்த மனுக்கள், மத்திய அரசு – மாநில அரசு இடையிலான பிரச்சினை என்பதால் அதை உச்ச நீதிமன்றம் மட்டுமே விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் லலித் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மத்திய அரசுடனான பூசலில் டெல்லி உயர் நீதிமன்றத்தை மாநில அரசுதான் அணுகியது. தற்போது விசாரணைக்கு பின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் முடிவெடுக்க நீங்கள் (டெல்லி அரசு) விரும்பாவிட்டால் எப்படி? இந்தப் பிரச்சினையில் நீங்கள் முடிவெடிக்க முடியும் அல்லது முடிவெடிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்திடம் நாங்கள் ஏன் சொல்ல வேண்டும்? நாட்டின் ஒவ்வொரு நீதிமன்றத்துக்கும் அரசியலமைப்பு சட்ட வரம்புக்கு உட்பட்டு முடிவெடிக்கும் சுதந்திரம் உள்ளது. உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கட்டும். அதை ஏற்காவிடில் மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.