உபியின் முசாபர்நகரில் நடந்த மதக்கலவர வழக்குகளில் கைதான பாரதிய ஜனதா கட்சியின் இரு எம்.எல்.ஏக்கள், ஆக்ராவில் நடைபெறவுள்ள நரேந்திர மோடியின் பொதுக்கூட்ட மேடையில் கௌரவிக்கப்பட உள்ளனர். இதனால், தேசிய அரசியலில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
இது பற்றி உபி மாநில பாஜகவின் செய்தி தொடர்பாளர் விஜய்பகதூர் பாதக் கூறுகையில், “இந்த இரு எம்.எல்.ஏக்களும் சமாஜ்வாதி அரசால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது, ஜாமீனில் வெளிவந்துள்ள இவர்கள், நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கும் ஆக்ராவின் மேடையில் கௌரவிக்கப்பட உள்ளனர். இதன்மூலம், அவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகள் பொய்யானது என மக்கள் புரிந்து கொள்வார்கள்” எனத் தெரிவித்தார்.
குஜராத் முதல்வரான நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் வரும் வியாழக்கிழமை ஆக்ராவில் நடைபெற உள்ளது.
இதில், கௌரவிக்கப்பட உள்ள மீரட்டின் சர்தனா தொகுதியின் சுரேஷ் ராணா மற்றும் முசாபர்நகரின் ஷியாம்லி தொகுதியின் சங்கீத் சோம் ஆகிய எம்.எல்.ஏக்கள் மீது, முசாபர்நகரின் இரு பஞ்சாயத்துக்களில் கலந்து கொண்டது, போலியான வீடியோவை மொபைலில் உலவச் செய்து கலவரத்தை தூண்டியது, தீவைப்பு, சூறையாடல் போன்ற கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், அரசியல் சர்ச்சையாகிவிட்ட இந்த பிரச்சனை குறித்து கூறிய காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது, “இந்து, முஸ்லீம் என சமூகத்தை பிரிப்பதுதான் பாஜகவின் வேலை. இதை வைத்து அரசியல் நடத்தி வளர்ந்து வரும் கட்சி அது” எனக் கூறுகிறார்.