லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி 5-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, மசோதவை நிறைவேற்றுவதில் தனது கெடுபிடியை தளர்த்திக் கொண்டுள்ளார்.
ஜன் லோக்பால் அமைப்பு நடத்திய தொடர் போராட்டம் காரணமாக கடந்த 2011- ஆம் ஆண்டு லோக்பால் மசோதா சில திருத்தங்களுடன் மக்களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டது. மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி கடந்த 10-ஆம் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கும் ஹசாரே லோக்பால் மசோதா, அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களோடாவது மாநிலங்களவையில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்: "லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டிய கால கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே மசோதாவை உடனே நிறைவேற்றி விட்டு, சட்ட அந்தஸ்து கிடைத்த பின்னர் தேவைக்கேற்ப திருத்தங்களை மேற்கொள்ளலாம்" என்றார்.
லோக்பால் மசோதா நேற்று (வெள்ளிக் கிழமை) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. சமாஜ்வாதி கட்சி எழுப்பிய அமளி காரணமாக, மசோதா நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிண்டே உறுதி:
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதா நிறைவேற்றப் படும் என மத்திய உள் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உறுதிபட தெரிவித்துள்ளார்.