ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் மகா ராஷ்டிர மாநிலம் பிவண்டி நீதிமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆஜரானார்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது 2014 மார்ச் 6-ம் தேதி பிவண்டியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல், மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொலை செய்தனர் என்று பேசினார்.
இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ராகுலுக்கு எதிராக பிவண்டி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் துஷார் முன்பு ராகுல் ஆஜரானார்.
அப்போது ராகுலின் வாதத்தைப் பதிவு செய்வதற்காக வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி கூறியதாவது: ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் காந்தி வாழ்கிறார். மக்களின் மனதில் இருந்து அவரை யாராலும் அழிக்க முடியாது. ஆனால் பாஜகவினர் காதி நாட்காட்டி, நாட்குறிப்பில் இருந்து காந்தியை நீக்கிவிட்டு மோடியின் படத்தை அச்சிட்டுள்ளனர். காந்திய கொள்கைகளைக் காப்பாற்ற தொடர்ந்து போராடுவேன்.
இவ்வாறு தெரிவித்தார்.