இந்தியா

பொய்களைப் பரப்பவும் வெறுப்பை விதைக்கவும் தவறாக பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்கள்: சாம் பித்ரோடா சாடல்

செய்திப்பிரிவு

பொய்களைப் பரப்பவும் வெறுப்பை விதைக்கவும் சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக இந்திய தொலைத்தொடர்பு புரட்சியின் பிதாவாக கருதப்படும் சாம் பித்ரோடா கருத்து தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சிகள் தவறாக கையாளப்படுவதற்கானது இல்லை. ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் தளத்தில் வெளியாகும் கருத்துகளின் உண்மைத்தன்மைக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். மேலும் சமூக ஊடங்களின் நெறிமுறைகள் தொடர்பாக சர்வதேச அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் சமூக ஊடகங்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து:

கேள்வி: தொழில்நுட்ப பயன்பாட்டில் இருக்கும் சவால் என்ன?

பதில்: இப்போதைக்கு தொழில்நுட்ப பயன்பாடு குறித்த எனது அக்கறை எல்லாம் சமூக ஊடகங்களை நாம் பயன்படுத்தும் விதம் தொடர்பானதே. என்னைப் பொறுத்தவரை சர்வதேச அளவில் சமூக ஊடகங்கள் பொய்களைப் பரப்பவும் வெறுப்பை விதைக்கவும் தவறாகக் கையாளப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் இப்படி ஒரு நிலைத்தகவலைப் பார்த்தேன். அதில், "மோதிலால் நேருவுக்கு ஐந்து மனைவிகள் இருந்தனர். அக்பர் அவரது மகன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது எவ்வளவு பெரிய அபத்தம். ஆனால், இந்த அபத்தத்தை சிலர் ட்வீட் செய்வர், சிலர் வாட்ஸ் அப்பில் பகிர்வர். இப்படியே இந்தக் கருத்து 4 லட்சம் மக்களிடம் சென்றுவிடும். பலரும் பகிரும்போது அது ஒரு போலி உண்மைத்தன்மையைப் பெறும்.

இப்படியான தகவல்களைப் பகிர்பவர்கள் யார்? அவர்கள் பரப்பும் செய்தி அவதூறானது. செவிவழிச் செய்திகள் பலவும் இவற்றில் அடங்கும். இத்தகைய செய்திகளின் உண்மைத்தன்மைக்கு யாரும் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை.

நீங்கள் நினைத்தால் சாம் பித்ரோடா ஓர் ஊழல்வாதி என ட்விட்டரில் பதிவு செய்யலாம். என்னைச் சந்தித்து என்னிடம் ரூ.10 லட்சம் வழங்கியதாகக்கூட சொல்லலாம். இந்தப் பொய் மிக நன்றாகவே விற்பனையாகும். அப்படியே அதை கூகுள், ஃபேஸ்புக்கிலும் பரப்பலாம். ஏனெனில் அவர்கள் தங்களை ஊடக நிறுவனங்கள் என அடையாளப்படுத்திக் கொண்டாலும் தங்கள் தளங்களிலும் வெளியாகும் கருத்துகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தேவையெல்லாம் அவர்களது வலைதளத்துக்கான கிளிக்குகள் (சொடுக்குகள்). ஒவ்வொரு கிளிக்கும் அவர்களுக்கு வருமானம். கிசுகிசு செய்திகள் எவ்வளவு இருக்கின்றனவோ அவ்வளவு கிளிக்குகள் அவர்களுக்குக் கிடைக்கும்.

இதுதான் எனது மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. இதைத் தடுப்பதற்காகவே முற்றிலும் லாப நோக்கமற்ற ஓர் அமைப்பை உருவாக்கப்பட்டுள்ளது. நான் அதன் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறேன். சமூக ஊடகங்களுக்கான நெறிமுறைகளை வகுக்க சர்வதேச அளவில் ஓர் அமைப்பு வேண்டும். சமூக ஊடகங்களில் யார் வேண்டுமானால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் எதை வேண்டுமானாலும் மறைக்கலாம்.

சிறுபான்மையினருக்கு எதிராகவும், பெண்கள் குழந்தைகளுக்கு எதிராகவும் கருத்து வடிவிலும் புகைப்பட வடிவிலும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வெறுப்புணர்ச்சி பரிதாபத்துக்குரியது. இதை செய்வதற்காகத்தான் இத்தனை இத்தகை தொழில்நுட்பப் புரட்சிகள் உருவாக்கப்பட்டனவா? இந்தியாவிலும் சமூக ஊடகங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை. இங்குதான் எதை வேண்டுமானாலும் பரப்பிவிட்டு பொறுப்பற்றுச் செல்ல முடியும். இதில் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

SCROLL FOR NEXT