இந்தியா

ஜனநாயக உரிமைக்காக போராடும் அடையாளச் சின்னம் மண்டேலா - மார்க்சிஸ்ட் கட்சி அஞ்சலி

செய்திப்பிரிவு

சுதந்திரம்,ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் மக்களின் உயரிய அடையாளச் சின்னம்தான் நெல்சன் மண்டேலா என இடதுசாரி கட்சிகள் புகழஞ்சலி செலுத்தியுள்ளன.

அநீதி, பாரபட்சம், ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு இடம் இல்லாத உலகம் படைக்க போராடுவதே தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் மண்டேலாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்றும் அவை தெரிவித்துள்ளன.

தென்னாப்பிரிக்க மக்களுக்கு மட்டுமே அவர் அன்பு,நற்பண்பின் அடையாளமாக திகழவில்லை. நிறவெறிக் கொள்கை, அடக்குமுறையில் ஊறிய வெள்ளையர்களின் பாசிசவாத, காட்டுமிராண்டித்தன அரசுக்கு எதிராக தென்னாப்பிரிக்க மக்களை திரட்டி நீண்ட நெடுங்காலம் போராடி சுதந்திரம் பெற்றுத்தந்தவர். என மார்க்சிஸ்ட் கட்சி பொலிட்பீரோ விடுத்த இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறவெறி எதிர்ப்பு, விடுதலைக்கான போராட்டத்துக்கான வழிகாட்டி என்பதுடன் மட்டும் இல்லாமல் சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் பெற உலகெங்கிலும் போராடிவரும் மக்களின் அடையாளச் சின்னமாக திகழ்பவர் மண்டேலா என்றும் மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்து நற்பெயர் பெற்றவர். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ரகசிய ராணுவ பிரிவுக்கு தலைமை தளபதியாக பொறுப்பேற்று வழிநடத்தியவர். தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் இருந்து அதன் மத்திய குழுவிலும் சிறப்பாக பணியாற்றியவர்.

27 ஆண்டு சிறை வாழ்க்கைக்குப் பிறகு விடுதலையான மண்டேலா உடனடியாக இந்தியா வந்து கொல்கத்தாவுக்கு விஜயம் செய்தபோது முதல்வர் ஜோதிபாசு வரவேற்றார். எப்போதும் இல்லாத அளவுக்கு விமரிசையான வரவேற்பு தரப்பட்டது. மண்டேலாவைக் காண திருவிழாவில் கூடுவதுபோல் மக்கள் திரண்டனர் என்று தனது இரங்கல் செய்தியில் மார்க்சிஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

மண்டேலாவின் குடும்பத்தார், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்,தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, தென்னாப்பிரிக்க தொழிற்சங்க காங்கிரஸ், தென்னாப்பிரிக்க மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் செய்தியை அனுப்பியுள்ளது மார்க்சிஸ்ட் கட்சி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மை வெள்ளையர் நடத்திய நிறவெறி ஆட்சிக்கு முடிவு கட்டியவர் மண்டேலா. இந்த போராட்டத்தில் வெற்றி காண அவருக்கு துணை நின்றது அவரது மன உறுதி, அரசியல் முதிர்ச்சி, பெருந்தலைவருக்கே உரிய அபூர்வ குணங்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT