மாநில அரசின் அரசின் தடையை மீறி, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நடைபெற்ற சங்கல்ப திவாஸ் பேரணியில் பங்கேற்ற பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் உள்பட 1,600 பேர் உத்தரப் பிரதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் சார்பில் சங்கல்ப திவாஸ் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இப்போராட்டத்துக்கு உத்தரப்பிரதேச போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர். இதனிடையே வெள்ளிக்கிழமை இப்போராட்டம் நடைபெற்றது. விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் பேரணியாகச் சென்றனர். தடையை மீறி ஊர்வலம் சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச காவல்துறை சட்டம் ஒழுங்கு ஐ.ஜி. ஆர்.கே. விஸ்வகர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜக மற்றும் விஎச்பி தலைவர்கள் உள்பட 1,600 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அயோத்தி மற்றும் பைஸாபாத் வழிகள் அடைக்கப்பட்டுள்ளன. சரயு நதியில், சரத் பௌர்ணமியை முன்னிட்டு 10 ஆயிரத்துக்கும் அதிமான மக்கள் புனித நீராடினர் என்றார்.
இந்தப் பேரணியையொட்டி, 2,000 அதிரடிப்படை போலீஸார் மற்றும் ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.