இந்தியா

பா.ஜ.க.வில் நடிகை ரக்சிதா இணைகிறார்?- நடிகை ரம்யாவை எதிர்த்து போட்டி

செய்திப்பிரிவு

மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக களமிறங்கும் நடிகை ரம்யாவை எதிர்த்து நடிகை ரக்சிதா போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார். அவர், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி வியாழக்கிழமை பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரம்யாவுக்கும் ரக்சிதாவிற்கும் இடையே திரையில் நிலவிய கடும் போட்டி தேர்தலிலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ரக்சிதா. தமிழில் நடிகர் விஜய்யுடன் `மதுர' திரைப்படத்திலும், நடிகர் சிம்புவுடன் `தம்' திரைப்படத்திலும் நடித்துள்ளார். கன்னட திரையுலகில் இவருக்கும் நடிகை ரம்யாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

கன்னடத்தில் வெற்றிப்பட இயக்குநரும் நடிகருமான பிரேமை காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை ரக்சிதா சில ஆண்டுகள் திரைப்பட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தார்.கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியின் சார்பாக மண்டியா தொகுதியில் போட்டியிட்டார். அப்போது மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எடியூரப்பா மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்த போது,ரக்சிதா தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் ஐக்கியமானார். மேலும் வருகின்ற மக்களவை தொகுதியில் மண்டியா தொகுதியில் ரம்யாவை எதிர்த்து போட்டியிட விருப்ப மனுவும் தாக்கல் செய்தார். ஆனால் தேவகவுடா அவருக்கு சீட் வழங்கவில்லை.

ரம்யாவை எதிர்க்கத் தயார்

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ரக்சிதா கடும் அதிருப்தி அடைந்தார். மண்டியா தொகுதியில் தான் போட்டியிட்டு இருந்தால் நிச்சயம் ரம்யாவை வீழ்த்தி இருப்பேன் என்றும் கூறினார். இந்நிலையில் தற்போது வாய்ப்பு வழங்காத‌ ம.ஜ.த.வில் இருந்து விலக ரக்சிதா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் ரக்சிதா பா.ஜ.க.வில் புதன்கிழமை இணைய உள்ளதாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.எனவே மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. செலுவராய சாமி பெங்களூர் ஜே.பி.நகரில் உள்ள ரக்சிதாவின் வீட்டில் அவரை சந்தித்து பேசினார்.

அப்போது கட்சி மாற வேண்டாம். தேவகவுடா, குமாரசாமியுடன் கலந்து பேசி நல்ல‌ முடிவு சொல்கிறேன். நிச்சயம் மண்டியாவில் ரம்யாவை எதிர்த்து போட்டியிட ஏற்பாடு செய்கிறேன் என சமரசம் செய்ததாக கூறப்படுகிறது.

பா.ஜ.க.வில் இணைகிறார்?

தன்னுடைய கணவரின் சொந்த ஊரான மண்டியாவில் தனக்கு நல்ல பெயர் இருக்கிறது. தனக்கு வாய்ப்பு வழங்கினால் நிச்சயம் காங்கிரஸ் சார்பாக களமிறங்கும் ரம்யாவை தோற்கடிப்பேன் என ரக்சிதா கூறி இருக்கிறார்.

இந்நிலையில் ரக்சிதாவை தொடர்பு கொண்ட கர்நாடக பா.ஜ.க. தலைவர்கள், தங்களுடைய கட்சியில் இணைந்தால் மண்டியாவில் போட்டியிட சீட் வழங்குவதாக கூறி இருக்கிறார்கள்.

இதனால் உற்சாகம் அடைந்த ரக்சிதா பா.ஜ.க.வில் இணைய திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் பா.ஜ.க.வின் சார்பாக உறுதியாக மண்டியா தொகுதியின் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே இணைவேன் என்று நிபந்தனை விடுத்துள்ளார்.

ரம்யாவை எதிர்க்கும் காங்கிரஸார்!

மண்டியா தொகுதி காங்கிரஸார் சிலர் ரம்யாவிற்கு எதிராக செயல்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரம்யாவிற்கு பெரும்பலமாக இருந்த நடிகர் அம்பரீஷ் தற்போது சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று வருவதால் ரம்யா மிகவும் சோர்வடைந்து இருக்கிறார்.மேலும் மண்டியா மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மாதே கவுடா தனக்கு சீட் வழங்காததால் ரம்யாவின் தேர்தல் பணிகளை முற்றிலுமாக புறக்கணித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT