இந்தியா

ஜூலை 10-ம் தேதி மல்லையா ஆஜராவதை உறுதி செய்க: உள்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

பிடிஐ

வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராவதை உறுதி செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்புக்காக அவருக்கு அளிக்கப்படும் தீர்ப்பன்று அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் படி தனது சொத்து விவரங்களை அளிக்காமலும், கர்நாடக உயர் நீதீமன்ற ஆணையை மீறி தன் வாரிசுகள் பேரில் 40 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளை மாற்றியதாலும் இவர் மீது உச்ச நீதிமன்றம் அவமதிப்பு குற்றம்சாட்டியது.

இந்திய அரசு சமீபத்தில் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக பிரிட்டன் அரசிடம் முறையிட்டது, இது குறித்த வழக்கு அங்கு நிலுவையில் உள்ளது.

இதனையடுத்து இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், உதய் உமேஷ் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு தனது உத்தரவில், “நாங்கள் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் மல்லையா ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராவதை உறுதி செய்யக் கோருகிறோம். இது குறித்த இந்த உத்தரவின் நகல் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்படுகிறது” என்று கூறினர்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அதிகபட்சமாக 6 மாத சிறைத் தண்டனையோ ரூ.2000 அபராதமோ விதிக்கப்படும்.

இது குறித்து நீதிபதிகள் கூறும் போது, “அவருக்கு இன்னொரு வாய்ப்பளிக்கிறோம். அவர் தனக்கான தண்டனை மொழிவை கேட்க வேண்டியது அவசியம் எனக் கருதுகிறோம். ஆகவே ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அவர் நேரில் ஆஜராவதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும்” என்றனர்.

மேலும் நீதிமன்றம் தனது 26 பக்க உத்தரவில், “இது குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுகள் தெளிவானது, முரண்களற்றது. அவரது சொத்துக்கள் சொன்தப் பிணையில் உள்ளதா இல்லையா என்பது முக்கியமல்ல. முழுமையான சொத்து விவரங்களை அளிக்க அவருக்கு உத்தரவிடப்பட்டது. அவர் இந்த உத்தரவுகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

எட்மண்ட் டி ராத்ஸ்சைல்ட் வங்கியில் அவர் வைத்திருக்கும் கணக்கு பற்றி மல்லையா இதுவரை வெளியிடவில்லை என்று வங்கிகள் தரப்பில் கூறப்பட்டது சரியான தகவலே.

உண்மையில் அயல்நாட்டு வங்கிக் கணக்கு விவரங்கள் எதையுமே மல்லையா இது வரை அளிக்கவில்லை. இதனை மறைப்பதன் மூலம்தான் அவர் 40 மில்லியன் டாலர்கள் தொகையை தனது 3 வாரிசுகள் பெயரில் மாற்றியுள்ளார். இது கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும். இதன் மூலம் மல்லையாவின் கட்டுப்பாட்டில் இருந்த தொகை, பணம் கோர்ட் நடைமுறைகளுக்கு எட்டாத தொலைவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுவே அவரது நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது.

இந்த ஒட்டுமொத்த அவரது நடத்தையையும் கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், அவர் இருநீதிமன்ற உத்தரவுகளையும் மீறி அவமதிப்பு செய்துள்ளது தெளிவாகிறது” என்று கூறபட்டுள்ளது.

மல்லையாவின் வழக்கறிஞர் வாதிடும் போது டியாஜியோவிலிருந்து வந்த பணம் மல்லையாவுடையதல்ல அவரது வாரிசுகளுடையது என்றார்.

SCROLL FOR NEXT