இந்தியா

எம்.எல்.ஏ. பின்னி மீது ஒழுங்கு நடவடிக்கை: ஆம் ஆத்மி

செய்திப்பிரிவு

கட்சிக்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள தமது எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னி மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஆம் ஆத்மி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ், "பின்னிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகளை கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான குழு மேற்கொள்ளும். அவர் விளக்கம் அளிப்பதற்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

'பின்னிக்குப் பின்னால் பாஜக?'

யாரோ சிலர் எழுதிக் கொடுத்ததைத்தான் பின்னி இன்று பேசியிருக்கிறார். அவர் எழுப்பிய விவகாரங்கள் அனைத்துமே அண்மையில், எதிர்கட்சித் தலைவர் ஹர்ஷவர்தன் (பாஜக) சமீபத்தில் பேசியவைதான்.

பின்னிக்கு கட்சியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி இருந்தால், அதனைக் கட்சித் தலைவர்களிடம் கூறியிருக்கலாம். ஆனால், கட்சிக் கூட்டத்தில் இது குறித்து அவர் இதுவரை பேசியதே இல்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.

ஜனவரி 14-ல் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில், ஒரு வார்த்தை கூட பின்னி பேசவில்லை. அவர் மக்களிடையே நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் இழக்கச் செய்யும் வகையில் நடக்கக் கூடாது.

டெல்லி அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு வினோத் குமார் பின்னி விரும்பினார். இப்போது, டெல்லி கிழக்கு தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் விரும்புகிறார்" என்றார் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ்.

டெல்லியின் லக்ஷ்மி நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வினோத் குமார் பின்னியால் ஆம் ஆத்மி கட்சியில் மீண்டும் உட்கட்சி பூசல் எழுந்துள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று இவர் கடுமையாக சாடத் தொடங்கி இருக்கிறார்.

மக்களை தமது கட்சி ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை 'ஒரு சர்வாதிகாரி' என்று கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

மேலும், ஜனவரி 27-ம் தேதிக்குள் ஆம் ஆத்மி அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், தாம் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT