ஆந்திரத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தெலங்கானா மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடாது என வலியுறுத்தியும் முதல்வர் கிரண் குமார் ரெட்டி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளார்.
தெலங்கானா மசோதாவுக்கான வரைவு அறிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதாக சுட்டிக் காட்டிய ஆந்திர முதல்வர் கிரண் குமார், அந்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். அது சட்டமன்றத் தலைவரின் உதவியுடன் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அந்த மசோதாவை மத்திய அமைச்சரவை மூலமாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தி டெல்லியில் அவர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஆனால், துணை முதல்வர் ராஜநரசிம்மா உட்பட தெலங்கானாவுக்கு ஆதரவானோர் அனைவரும், சட்டமன்றத்தில் தெலங்கானா மசோதா குறித்த விவாதம் முடிவடைந்துவிட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சியினரின் ஆதரவோடு வரும் கூட்டத் தொடரில் மசோதா நிறைவேறும் என எதிர்பார்த்து வருகின்றனர்.
இதனிடையே, தனக்கு நெருக்கமான அமைச்சர்களோடு ஆலோசனை நடத்திய முதல்வர் கிரண் குமார் ரெட்டி, மத்திய அரசுக்கு எதிராக டில்லியில் மவுன போராட்டம் நடத்தி குடியரசு தலைவரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. வரும் பிப்ரவரி 4-ம் தேதி, டெல்லியில் தெலங்கானா மசோதா குறித்து மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
எனவே, பிப்ரவரி 3-ம் தேதி டெல்லிக்குச் சென்று, அன்றைய தினமோ அல்லது மறுநாளோ காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட் அருகே மவுன போராட்டம் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகை வரை பாத யாத்திரையாக சென்று குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளார். அவரிடம், ஆந்திர சட்டமன்றம் நிராகரித்த மசோதாவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பக் கூடாது என கோரிக்கை விடுப்பார்.
இத்தகவலை, சனிக்கிழமை முதல்வருடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அமைச்சர்கள் ஷைலஜாநாத், ராமசந்திரையா ஆகியோர் தெரிவித்தனர்.