உத்தர பிரதேசத்தின் அசாம்கர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கள்ளச் சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று காலை மேலும் 15 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக, அம்மாவட்ட கலால் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் சிங் உட்பட பத்து பேரை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பதவி நீக்கம் செய்தார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2008- ஆம் ஆண்டு இதே மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து 12-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர் என்பதும், 2010-ஆம் ஆண்டு வாரனாசியிலுள்ள சோயிபூர் கிராமத்தில் ஆறு பேர் இறந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.